இந்தியா முழுக்க சிறப்பாகக் கொண்டாடப்படும் விழா நவராத்திரி. இவ்வாண்டு 10-10-2018 அன்று நவராத்திரி பூஜை ஆரம்பம். 18-10-2018 அன்று சரஸ்வதி பூஜை. 19-10-2018 அன்று விஜயதசமி.
நவராத்திரியின்போது ஒன்பது நாட்கள் தேவிக்கு பூஜை செய்வார்கள். 10-ஆவது நாளன்று விசேஷ பூஜை செய்யப்படும்.
அதுதான் தசரா பண்டிகையாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
முதல் நாள்: தாய் துர்க்கையை "ஷைல புத்ரி' என்ற வடிவத்தில் வழிபடுவர். இதனால் உடல் நலம் பெறும். அச்சத்திலிலிருந்து விடுதலை கிடைக்கும். எதிரிகளிடம் வெற்றிபெறலாம்.
இரண்டாவது நாள்: பிரம்மச்சாரிணி வடிவத்தில் துர்க்கையை வழிபடுவர். இதனால் வேலை வாய்ப்பிலிருந்த தடைகள் நீங்கும். தவ நிலையில் இருக்கும் இந்த துர்க்கையை வழிபடுபவர்களுக்கு தேர்வு, போட்டி ஆகியவற்றில் வெற்றிகிடைக்கும். பூஜை செய்யும்போது பிரசாதமாக ஐந்து பழங்களை வைக்கவேண்டும்.
மூன்றாவது நாள்: "சந்திரகண்டா' வடிவத்தில் துர்க்கையை வழிபடுவர். சிலருக்கு எதிர்பாராமல் சிரமங்கள் உண்டாகி, மேகங்களைப்போல சூழ்ந்து கொண்டிருக்கும். யாரும் உதவி செய்யமாட்டார்கள். எந்த வழியுமே கண்களில் தெரியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த துர்க்கையை வழிபட்டால் கஷ்டங்கள் தீரும்.
நான்காவது நாள்: "கூஷ்மாண்டா' வடிவத்தில் (பூசணிக்காய் வடிவத்தில்) துர்க்கையை வழிபடவேண்டும். திருமண வாழ்க்கையில் சந்தோஷமே இல்லாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த துர்க்கையை வழிபட்டால் பிரச்சினை தீரும். மாதுளம்பழம், மாதுளம் பழத்தின் சாறு ஆகியவற்றைப் பிரசாதமாக வைத்து வழிபட வேண்டும்.
ஐந்தாவது நாள்: "ஸ்கந்த மாதா' வடிவத்தில் துர்க்கையை வழிபடவேண்டும். பேச்சாளர்கள், மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவர்கள், ஊடகத்தில் இருப்பவர்கள் இந்த துர்க்கையை வழிபடவேண்டும். கோதுமை அல்வா பிரசாதமாக வைக்கலாம்.
ஆறாவது நாள்: கார்த்தியாயினி வடிவத்தில் துர்க்கையை வழிபட வேண்டும். வீட்டில் கணவன்- மனைவி சண்டை, சந்தோஷமற்ற திருமண வாழ்க்கை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த துர்க்கையை வழிபட்டால் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக அமையும். தேங்காய், லட்டு ஆகியவற்றைப் பிரசாதமாக வைக்கவேண்டும்.
ஏழாவது நாள்: "காளராத்திரி' வடிவத்தில் துர்க்கையை வழிபடவேண்டும். பகைவர்கள் அதிகமாக உள்ளவர்கள் இந்த துர்க்கையை வழிபட்டால் பகைவர்களிடமிருந்து விடுதலை பெறலாம். தேனைப் பிரசாதமாக வைக்கவேண்டும்.
எட்டாவது நாள்: "மகாகௌரி' வடிவத்தில் துர்க்கையை வழிபடவேண்டும். செல்வந்தர்களாக வேண்டும்; புகழ்பெற வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் துர்க்கையை இந்த வடிவத்தில் வழிபடலாம். பூஜையின்போது ஜவ்வரிசியில் செய்த பிரசாதத்தை வைக்கவேண்டும்.
ஒன்பதாவது நாள்: "சித்திதாத்ரி' (அறிவைத் தருபவள்) வடிவத்தில் துர்க்கையை வழிபட வேண்டும். மனதில் நினைக்கும் அனைத்து ஆசைகளும் நிறைவேறும். பலவிதமான பழங்கள், மலர்கள் ஆகியவற்றை வைத்து வழிபாடு செய்யவேண்டும்.
துர்க்கையை வழிபடும் பக்தர்கள் அன்னையை முழுமையான அர்ப்பணிப்புடன் வழிபட்டால், அவர்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கும். தோஷங்கள் நீங்கும். நோய்கள் குணமாகும். கடன்கள் தீரும். பகைவர்கள் நீங்குவார்கள். மனக்கஷ்டங்கள் மறைவும்.
"ஓம் ரீம் தும் துர்க்கையை நமஹ' என்ற மந்திரத்தை தினமும் ஒரு மாலை (108 முறை) கூறவேண்டும். இவ்வாறு ஒன்பது நாட்களும் கூறினால் அதற்குரிய பலன் கிடைக்கும்.
நவராத்திரி பூஜை செய்பவர்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்கவேண்டும். பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். சைவ உணவுமட்டுமே சாப்பிடவேண்டும்.
10-ஆவது நாள் மகிஷாசுரன் என்ற அரக்கனை துர்க்கை அழித்த நாள். நம் மனதில் இருக்கும் அரக்க குணத்தை அழிப்பதற்கு 10-ஆவது நாளான விஜயதசமியில் தேவியை வழிபடவேண்டும்.
வட இந்தியாவில், இராவணனை அழித்துவிட்டு ராமர் திரும்பி வந்த வெற்றிநாளாக தசராவைக் கொண்டாடுகிறார்கள். "ராவண தகனம்' செய்து, தங்கள் மனங்களிலிலிருக்கும் கெட்ட எண்ணங்கள் எரிக்கப்பட்ட வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, அந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.
தசரா பண்டிகையன்று வட இந்தியாவில் ஒவ்வொருவரும் தாங்கள் பயன்படுத்தும் கருவிகள், இயந்திரங்கள் ஆகியவற்றிற்கு பூஜை செய்வார்கள்.
தென்னிந்தியாவில் ஒன்பதாவது நாள் ஆயுத பூஜை, பத்தாவது நாள் விஜய தசமி என்று கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியில் தூய மனத்தோடு தேவி வழிபாடு செய்தால் தொல்லைகள் நீங்கி இன்பங்கள் சேரும்.
செல்: 98401 11534